புகைப்படத்தில்
 இருக்கும் உருவங்கள் நகரும் என்பதை நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் 
சாத்தியமில்லாத விஷயமாக கருதிக் கொண்டிருந்தார்கள். அசையும் படங்களுக்கான 
ஃபிலிம் புரொஜெக்டரை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் சிறு சிறு படங்களை 
உருவாக்கி மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். அப்போது இந்த 
சமாச்சாரத்துக்கு சினிமா என்று பெயர் வைக்கப்படவில்லை. Actualities (உண்மை 
நிகழ்வுகள்) என்று பெயர்.
The
 arrival of a train at Station என்கிற 46 நொடிகள் நீளமுள்ள திரைப்படத்தை 
(?), 1895ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக லூமியர் சகோக்கள் திரையிட்டபோது, 
பெரும் அமளி துமளி ஏற்பட்டது. திடீரென்று திரையில் தோன்றிய ரயில் 
பார்வையாளர்கள் மத்தியில் புகுந்து பெரும்
 விபத்து ஏற்பட்டு விடுமோவென்று 
அஞ்சி, ரசிகர்கள் சிதறி ஓடினார்கள்.இத்தனைக்கும் இவையெல்லாம் ஒலியற்ற 
மவுனப்படங்கள்.
இதுபோல மொத்தம் ஐந்து துண்டுப் படங்களை லூமியர்கள் உருவாக்கி திரும்பத் 
திரும்ப அவற்றைத் திரையிட்டு உலக ரசிகமகாஜனங்களை குஷிப்படுத்தினார்கள் 
என்று வரலாறு செப்புகிறது. சினிமாவை வெறும் செப்படி வித்தையாகதான் 
லூமியர்கள் பார்த்திருக்கிறார்கள். லூயிஸ் லூமியர் ஒருமுறை சொன்னார். 
“சினிமா என்பது ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மட்டுமே. இதற்கு பெரிய 
எதிர்காலம் எதுவும் கிடையாது. இதை வைத்து காசெல்லாம் சம்பாதிக்க முடியாது”.
 லூமியரின் அறியாமையை விட்டு விடுவோம். அவர் பாவி. தெரியாமல் 
சொல்லிவிட்டார். பரலோகத்தில் இருக்கும் பிதா அவரை இரட்சிக்கட்டும்.
கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தாலும் லூமியரின் படங்கள் அனைத்துமே 
2டி டெக்னாலஜிதான். அதாவது சினிமா பிறந்தபோதே 2டியாகதான் பிறந்தது. 2டி 
என்றால் டபுள் டைமென்ஷன். அதாவது திரையில் காட்சிகளின் நீள, அகலத்தை 
நீங்கள் உணர்ந்துக் கொள்ள முடியும். 1டியில் படமெடுக்க முடியுமாவென்று 
யாராவது கேமிராமேன்கள்தான் சொல்ல வேண்டும் (1டி என்று ஒன்று இருக்கிறதா 
என்ன?). நீளத்தை X என்று எடுத்துக் கொண்டால், அகலத்தை Y என்று 
புரிந்துகொள்ளுங்கள். XY = 2D என்று நீங்கள் இப்போது அறிந்து கொண்டால் 
போதுமானது.
அதற்குப்
 பிறகு ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சினிமா வளரத் தொடங்கியது. பேசத் 
தொடங்கியது. தனக்கு வண்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியது. திரையை அகலப்படுத்தி 
ஸ்கோப் ஆக்கிக் கொண்டது. அழவைத்தது. சிரிக்க வைத்தது. கிளுகிளுப்பூட்டியது.
 பாடியது. ஆடியது. அரசியல் பேசியது. புரட்சியை வெடிக்க வைத்தது. உண்மை 
சொன்னது. பொய் பேசியது. இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்தது.
ஒரு ஐம்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் 
பிறகு நிறைய பேர் வெட்டியாக இருந்தார்கள். உலகத்தையே மாற்றிக் காட்ட 
வேண்டும் என்று எல்லாத் துறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை ‘உல்டா’வாகவோ, 
அட்வான்ஸாகவோ செய்துக்கொண்டே இருந்தார்கள். பொழுதுபோகாத யாரோ ஒருவர் சினிமா
 ஏன் XY என்று இருபரிமாணத்திலேயே தெரியவேண்டும், மூன்றாவது பரிமாணத்தைக் 
கொண்டிருந்தாலும் இன்னும் reality கிடைக்குமேவென்று ஆசைப்பட்டார்.
ஆசை,
 தோசை, அப்பளம், வடை. சாதாரண காரியமா இது? அவர் ஆசைப்பட்ட மூன்றாவது 
பரிமாணம் Z. அதாவது perspective dimension. நீள அகலத்துக்கு இடையேயான 
depthஐ பார்வையாளனுக்கு காட்டுவது. நம்முடைய கண்கள் இயற்கையிலேயே 3டி 
என்பதால், நமக்கு ரோட்டில் நடந்து வரும் சிகப்புச்சேலை ஆண்டிக்கும், பஸ் 
ஸ்டேண்டில் பச்சை சுடிதார் போட்ட ஃபிகருக்கும் இடையிலான தூரம் 
பெர்ஸ்பெக்டிவ்வாக தெரிகிறது. ஒரு வெள்ளைத் திரையில் புரொஜெக்டர் மூலம் 
திரையிடப்படும் படத்தை 3டியாக காட்டுவதென்றால் நடக்கின்ற காரியமா? நடத்திக்
 காட்டினார்கள்.
என்ன ஒரு தொல்லை? முப்பரிமாணக் காட்சிகளை உணர ரசிகனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா 
கண்ணாடி தேவைப்பட்டது. படப்பிடிப்பின் போது கூடுதல் கேமிரா வைத்து அதே 
காட்சிகளை perspective depthல் படம் பிடிக்க வேண்டியிருந்தது. இது கொஞ்சம் 
காஸ்ட்லியான சமாச்சாரம். சீன் சரியில்லை ‘கட்’ என்று சொல்லிவிட்டால், 
ஃபிலிம் இருமடங்கு வேஸ்ட் ஆகும். திரையரங்கில் திரையிடும்போது 
பார்வையாளர்களுக்கு கண்ணாடி கொடுக்க வேண்டும். காட்சி முடியும்போது 
கண்ணாடியை பத்திரமாக திரும்பி வாங்கியாகவேண்டும். இரண்டு புரொஜெக்டர் ஒரே 
நேரத்தில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். டைமிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் படம் 
ஏடாகூடமாக தெரியும். இதுமாதிரி சின்ன சின்ன தொல்லைகளை தாண்டிப் பார்த்தால்,
 3டி ஓக்கேதான். XYZ பரிமாணத்தில் நம்மால் இன்று அவதாரை அசால்ட்டாக ரசிக்க 
முடிகிறதென்றால் பல்லாயிரத்து சொச்சம் பேர் பகல், இரவு பார்க்காமல் 
உழைத்திருக்கிறார்கள்.
1952ல்
 வெளியான ப்வானா டெவில் என்கிற திரைப்படம்தான் 3டி டெக்னாலஜியில் வெளிவந்த 
முதல் முழுநீளத் திரைப்படம் என்கிறார்கள். திரையில் பாயும் சிங்கம், எங்கே 
நம்மையும் கடித்து, கிடித்து வைத்துவிடுமோவென்று முன்ஜாக்கிரதை 
முத்தண்ணாக்கள் பலரும் தப்பியோட வசதியாக கதவுக்கு அருகிலிருந்த சீட்டில் 
உட்கார்ந்துக் கொள்வார்கள்.
ஆனாலும் 3டியை திரையிடுவதற்கு ஏகத்துக்கும் மெனக்கெட வேண்டியிருந்தது. 
இதற்கு செலவாகும் கூடுதல் தொகையை ரசிகர்கள் தலையில்தான் கட்ட 
வேண்டியிருந்தது. மொக்கைப் படங்கள் சிலவும் 3டியில் வந்து தொலைத்ததால், 
அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். 
இவ்வாறாக 3டியின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
80களில்
 ஐமேக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களை கவரவேண்டுமே 
என்கிற ஆர்வத்தில் மீண்டும் 3டியை தூசுதட்டி எடுத்தது. அந்த 
காலக்கட்டத்தில் தான் இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் 
குட்டிச்சாத்தான் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, இந்தியாவின் பலமொழிகளிலும் 
டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. தமிழிலும் மொக்கையாக 3டி 
படங்கள் எடுக்கப்பட்டன. தமிழின் முதல் 3டி படம் ஒரு விஜயகாந்த் படம் 
(படத்தின் டைட்டில் அன்னைபூமி என்று நினைவு. அப்பா ஜெயலட்சுமி 
தியேட்டருக்கு அழைத்துப்போய் காண்பித்தார்). 3டியில் விஜயகாந்த் காலை நம் 
முகத்துக்கு மேலே உயர்த்தி உதைக்க, படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனின் 
மூக்கிலும் ரத்தம் வந்த எஃபெக்ட். இந்த பீதியை எல்லாம் தாங்க முடியாததால் 
இந்தியாவில் 3டி அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை.
மீண்டும்
 2003ல் கோஸ்ட்ஸ் ஆஃப் தி அபிஸ் மூலமாக 3டி ஐமேக்ஸில் ஜேம்ஸ் கேமரூன் 
கலக்கத் தொடங்க, அன்று பீடித்த 3டி ஃபீவர் இன்றுவரை உலகுக்கு ஓயவில்லை. 
இப்போதெல்லாம் ஹாலிவுட்டில் இயக்குனர்கள் கதை சொல்லும்போதே, “ஹீரோ வீசுற 
கத்தி, அப்படியே சொய்ங்குன்னு பயங்கர சவுண்டோட போயி ஆடியன்ஸு நெஞ்சுலே 
குத்துது சார்” என்றுதான் ஆரம்பிக்கிறார்களாம்.
இந்தப் போக்கினை ஜேம்ஸ் கேமரூனே கண்டிக்கிறார். “கம்ப்யூட்டர் 
கிராஃபிக்ஸில் டாய் ஸ்டோரி வந்து பெரும் வெற்றி கண்டவுடன், தொடர்ச்சியாக 
பத்து மொக்கைப் படங்கள் மோசமான கிராஃபிக்ஸோடு வெளியாகி மக்களை நோகடித்தது. 
இப்போது 3டி கதையும் அதேதான். தேவைப்படுகிறதோ இல்லையோ. ஆளாளுக்கு 3டியில் 
படமெடுத்து, 3டி மீது மக்களுக்கு இருக்கும் பிரமிப்பினை ஒழித்துத் 
தொலைக்கிறார்கள்” என்று காரமாக சொல்லியிருக்கிறார்.
இந்த
 கந்தாயத்தை எல்லாம் விட்டுவிடுவோம். அடுத்து 4டி டெக்னாலஜி வருகிறதாம். 
உலகின் முதல் 4டி டெக்னாலஜி திரைப்படமான ஸ்பை கிட்ஸ்-4 ஆகஸ்ட் 19 அன்று 
உலகெங்கும் வெளியாகிறதாம். XYZ ஓக்கே. அதற்கப்புறம் ஆங்கிலத்தில் 
வார்த்தையே இல்லையே? நீள, அகலம், perspective ஆகிய மூன்றினையும் தாண்டி 
இன்னொரு பரிமாணமும் இருக்கிறதா என்று நிறையப்பேர் குழம்பிப் போய் 
திரிகிறார்கள். நாலாவது பரிமாணம் கண்ணுக்கு அல்ல, மூக்குக்கு. ஆமாம், படம் 
பார்க்கும்போது காட்சிகளுக்கு ஏற்ப வாசனைகள் தோன்றுமாம். அதாவது நாயகன் 
நாயகியின் கழுத்தில் மூக்கை வைத்து மோப்பம் பிடித்து காதல் செய்தால், நாயகி
 உபயோகித்திருக்கும் குட்டிகுரா பவுடரின் வாசனை உங்கள் மூக்கைத் 
துளைக்கும். எப்பூடி? இந்த தொழில்நுட்பத்தை அரோமா ஸ்கோப் என்கிறார்கள்.
இது எப்படி சாத்தியம்?
படம் பார்க்க உள்ளே செல்லும்போது 3டி கண்ணாடி தருகிறார்கள் இல்லையா? கூடவே 
ஒரு அட்டையையும் தந்து விடுவார்கள். அந்த அட்டையில் ஒன்று முதல் எட்டு 
எண்கள் வரை பொறித்திருக்கும். குறிப்பிட்ட காட்சியில் உங்கள் மூக்கை 
குறிவைத்து, இயக்குனர் ஒரு காட்சியை வைத்திருந்தால், திரையில் ஒரு எண் 
தோன்றும். உங்கள் அட்டையில் அதே எண்ணை நீங்கள் தேய்த்துவிட்டால், 
காட்சிக்கேற்ற வாசனை பரவும். உங்களோடு படம் பார்க்கும் அத்தனை பேரும் 
அட்டையை அதே நேரத்தில் தேய், தேயென்று தேய்த்துக் கொண்டிருப்பார்கள் 
என்பதால், அரங்கே வாசனையில் அல்லோல கல்லோலப்படும்.
குமுதம்
 இதழ் ஒரு தீபாவளி ஸ்பெஷலில், இதே டெக்னிக்கை பிரிண்டிங்கில் கொண்டு 
வந்தது. ஒரு ரோஜாப்பூ படம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதை விரலில் தேய்த்து
 முகந்துப் பார்த்தால், ரோஜா வாசனை வரும். அடுத்த வாரம் ஒரு வாசகர் கடிதம் 
எழுதியிருந்தார். ரியல் ரோஜாவுக்கு பதிலாக, நடிகை ரோஜா படத்தை தேய்த்து 
முகர்ந்துப் பார்க்குமாறு செய்திருக்கலாமேவென்று.
தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் இந்த 4டி இருக்குமென்று சரியாகத் 
தெரியவில்லை. நம் மக்கள் எண்ணை மாற்றித் தேய்த்து குளறுபடி பண்ணாமல் 
இருப்பார்கள் என்பதற்கும் நிச்சயம் ஏதுமில்லை. இதற்காக தியேட்டர்காரர்கள் 
எவ்வளவு துட்டு எக்ஸ்ட்ரா வாங்கப் போகிறார்கள் என்பதும் இன்னும் 
தெளிவாகவில்லை.
கட்டுரையை முடிக்கும் முன்னர் இன்னொரு முக்கியமான தகவல். இந்த 4டி வாசனை 
டெக்னாலஜியை ஏதோ புதியதாக இன்றுதான் கண்டுபிடித்ததாக ஹாலிவுட்காரர்கள் 
ஆணவத்தில் ஆடுகிறார்கள். என்னவோ ராபர்ட் ரோட்ரிக்யூஸால் மட்டும்தான் 
இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்றெல்லாம் அலட்டிக் கொள்கிறார்கள்.
ஹாலிவுட்
 அல்பங்களே! இதே டெக்னாலஜியை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்கள் ஊர் புதுமை 
இயக்குனர், சகலகலா வல்லவர், பன்முக படைப்பாளி பாபுகணேஷ் முயற்சித்து, 
கின்னஸ் லெவலுக்கு போய்விட்டார் என்பதை இக்கட்டுரை வாயிலாக பெருமையோடு 
சொல்லிக் கொள்கிறேன். தி.நகரின் பாடாவதி தியேட்டரான கிருஷ்ணவேணியிலே கூட 
இந்த அற்புதத்தை பாபுகணேஷ் நிகழ்த்திக் காட்டியதை வரலாறு மறந்துவிடாது. 
அவர் இயக்கிய சூப்பர் டூப்பர் மொக்கைப் படமான ‘நானே வருவேன்’ படத்தில் பேய்
 வரும் பாடல் காட்சியில் மல்லிகைப்பூ மணம் கும்மென்று தியேட்டரில் வீசும். 
ஹாலிவுட்காரர்களுக்கு 4டி தான் தெரியும். பாபுகணேஷுக்கு 5டியே தெரியும். 
பேய் வரும் காட்சிகளில் மல்லிகைப்பூ வாசனை மட்டுமில்லை. தியேட்டருக்குள்ளே 
வெண்புகையும் பரவும் வகையில் அப்படத்தின் தொழில்நுட்பம், சினிமாவை நாலு 
கால் பாய்ச்சலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. ஹீரோயின் வகிதாவும், 
பெரும் ரிஸ்க் எடுத்து, முழு நிர்வாணமாகவும் நடித்திருந்தார் என்பதை தமிழ் 
சினிமா ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது.
இந்த 4டி விஷயத்தில் ஹாலிவுட்டுக்கு முன்னோடி நம்ம கோலிவுட்டுதான் என்பதை 
உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.
thanks : yuvakrishna 







 
 
No comments:
Post a Comment